விருதுநகர், ஜூன் 6: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க வளாக கிளை செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கேண்டீன்களை காலி செய்ய பொதுப்பணித்துறை உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். தற்போது செயல்பட்டு வரும் கேண்டீன்களை அகற்றி விட்டு வேறு நபர்களுக்கு கொடுக்க முயற்சிகள் நடப்பதாக தெரிவித்தனர்.
மேலும் தலைமை செயலகம், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் கேண்டீன்கள் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கேண்டீன்களை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாகவும், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் நலனுக்கு எதிராக கலெக்டர் செயல்படுவதாக கூறி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.