* மருத்துவர்கள், செவிலியர்கள் கவனக் குறைவால் வார்டுகளுக்குள் செல்வதாக புகார்சென்னை: கொரோனா நோயாளிகளை மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக கவனிக்காததால் உதவிக்காக வார்டுகளுக்குள் அவர்களது உறவினர்கள் சகஜமாக செல்வதும், அங்கேயே தங்குவதாலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மருத்துவமனை நிர்வாகங்கள் அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மோசமான கட்டத்திற்கு செல்வது மிக வேகமாக நடக்கிறது. முன்பெல்லாம் நோய் தாக்கி, 7, 8 நாட்களாகும். ஆனால், இப்போது 4, 5 நாட்களிலேயே அந்த நிலையை அடைந்து விடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த காலங்களில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை வாசலில் உள்ள பாதுகாவலர் அல்லது பணியாளர்கள் மூலம் கொடுத்து அனுப்புவது வழக்கம். கொரோனா வார்டுகள் உள்ள மருத்துவமனைகளை கண்டாலே மக்களுக்கு ஒருவித அச்சம் இருந்தது. அந்த பகுதிக்கு யாரும் செல்லவே தயங்கினர். கொரோனா நோயாளி எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அவர்களது உறவினர்கள் தொலைபேசி மூலம் மட்டுமே கேட்டு வந்தனர். ஆனால் இக்கட்டான இந்த காலகட்டத்தில் அவை எல்லாம் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தற்போது சர்வசாதாரணமாக கொரோனா வார்டுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு அங்கேயே அவர்களது உறவினர்கள் தங்கி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி தங்குபவர்கள் எந்தவித பாதுகாப்பு உடைகள் எதுவும் அணிவதில்லை. நோயாளிகளுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்கின்றனர். மேலும் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும் அவர்கள் அருகில் உள்ள ஓட்டல்களில் உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்குகின்றனர். அடுத்ததாக மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள டீ விற்பவர்களிடம் டீ வாங்கி குடிக்கின்றனர். அதை தொடர்ந்து, வீடுகளுக்கும் அடிக்கடி சென்று வருகின்றனர்.இதனால் அவர்களும் நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில், அவர்கள் மூலம் பலருக்கு நோய் தொற்றை பரப்புவதோடு தங்கள் குடும்பத்தாருக்கும் எமனாக மாறுகின்றனர். கொரோனா நோயாளிகளுடன் தங்கி இருப்பதால் நோய் தொற்றுக்கு ஆளாகி கடுமையான நோய் பாதிப்பை சந்திக்கின்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இந்த செயல் தொடர்ந்து வருவது நோய் பரவும் காரணிகளில் ஒன்றாக உள்ளது. இந்த சூழ்நிலையில், கொரோனா வார்டுகளுக்குள் நோயாளி தவிர உறவினர்கள் யாரும் உள்ளே வர அனுமதி கிடையாது என தமிழக அரசு அவசர அறிவிப்பை வெளியிட்டது. ஆனாலும் மருத்துவர்கள், செவிலியர்களின் கவனக்குறைவால், கொரோனா நோயாளிகளுக்கான உதவியாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக உள்ளனர். ‘கொரோனா நோயாளிகளுக்கான அனைத்து உதவிகளையும் மருத்துவர்களும், செவிலியர்களும் முறையாக செய்தால், நாங்கள் ஏன் கொரோனா வார்டுக்குள் வரப் போகிறோம்’ என்பதும் அவர்களின் குமுறலாக உள்ளது. எனவே, உறவினர்களின் இந்த கட்டுப்பாடற்ற செயலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தால் தான் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் ஓங்கிய குரலாக உள்ளது….
அரசு உத்தரவை அலட்சியப்படுத்தும் மருத்துவமனை நிர்வாகங்கள்: கொரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் தங்குவதால் நோய் தொற்று பரவும் அபாயம்
25