விருதுநகர், ஆக.13: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜபாளையம் சேத்தூரை சேர்ந்த ராமர் என்பவர் தலைமையில் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், ராஜபாளையம் வட்டம் முகவூர் முத்துச்சாமிபுரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நீண்ட காலமாக பணியாற்றிய பெண் ஆசிரியர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
கடந்த இரு மாதங்களாக பள்ளிக்கு ஆசிரியர் வரவில்லை. ஆசிரியர் வராமல் குழந்தைகள் மட்டும் பள்ளி சென்று வரும் நிலையில், ஆசிரியர் வராதது குறித்த காரணங்கள் தெரியவில்லை, மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரு மாதங்களாக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவும் வழங்கவில்லை. பள்ளி நிர்வாக பொறுப்பு தொடர்பான பிரச்சனையால் ஆசிரியர் வரவில்லை. சத்துணவும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் படிப்பை கவனத்தில் கொண்டு ஆசிரியர் மற்றும் மதிய சத்துணவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.