மதுரை: மதுரையில் காங்கிரஸ் மற்றும் தமாகாவிற்கான ஒரே அலுவலகத்தில் கொடியேற்றுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கட்சி அலுவலகத்தை போலீசார் பூட்டினர். மதுரை, கோ.புதூரில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், கட்சிக்கான அலுவலகத்தை பராமரித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இங்கு காங்கிரஸ் தலைவர்களுடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகைப்படமும் வைக்கப்பட்டு இருந்தது. இரு கட்சியினரும் இவ்வலுவகலத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கட்சியினர் காங்கிரஸ் கட்சிக்கொடியேற்ற இங்கு வந்தனர். அப்போது, தமாகாவினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த அலுவலகத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ேகா.புதூர் போலீசார் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்ட நிலையில், இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் அந்த அலுவலகத்தை பூட்டி, விசாரணை நடத்தி வருகின்றனர்.