மதுரை, ஜூன் 30: தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் 2017 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், வேளாண்மைக்குத் தேவையான நீர் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தி, விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கான சந்தை வாய்ப்புகள் விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதி உதவி மற்றும் தமிழக அரசின் பங்குடன் சேர்த்து ரூ.2,961 கோடியில் செயலி்பாட்டில் உள்ள இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 47 ஆறுகளின் துணை படுகைகளில் உள்ள 2,626 குளங்கள், 355 தடுப்பணைகள், 5,026 கி.மீ தூர நீர்வழித்தடங்கள் மற்றும் கால்வாய்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் 34 மாவட்டங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் இத்திட்டம் குறித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்ட அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை இணைந்து நேற்று மதுரை, தெப்பக்குளம் பகுதியில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்றோர் பறை இசை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மாடு ஆட்டம், மரக்கால் ஆட்டம் உள்ளிட்டவை வாயிலாக இத்திட்டத்தின் பயன்கள் மற்றும் இதில் விவசாயிகள் எவ்வாறு பலனடையலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த கலை நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.