புதுச்சேரி, செப். 1: புதிய சட்டசபை கட்டும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சபாநாயகர் செல்வம், சட்டசபையில் உள்ள தனது அறையில், நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் புதிய தலைமைச் செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம் கட்டுவதற்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டப்பேரவை வளாகமானது ரூ.576 கோடியில், தட்டாஞ்சாவடி மார்க்கெட்டிங் கமிட்டி வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் அமைப்பதற்கான கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும். நீண்ட காலமாக கிடப்பில் இருந்த கோப்புக்கு ஒப்புதல் அளித்த புதிய துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் குரூப்- பி பணியிடங்களான அசிஸ்டெண்ட், வேளாண் அதிகாரி, மோட்டார் வாகன துணை ஆய்வாளர் உள்ளிட்ட 9 துறைகளில் 180 பதவிகளில் எம்பிசி பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கோப்புக்கும் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். எம்எல்ஏக்கள் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டப்படுமா? எப்போது என்றெல்லாம் சட்டசபையில் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக சட்டசபை கட்டும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியதற்கு எங்களது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய துணை நிலை ஆளுநர் அரசுடன், இணக்கமாக இருப்பதால், இனி அரசு பணிகள் அனைத்தும் தொய்வில்லாமல் நடக்கும் என நம்புகிறோம். மாநில அந்தஸ்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் முதல்வர் ரங்கசாமி பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து நேரில் வலியுறுத்த உள்ளார். இந்த ஆண்டிலேயே மாநில அந்தஸ்துக்கான வழிவகைகள் ஆராயப்படும். அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒரு அங்குலம்கூட யாரும் அபகரிப்பு செய்ய முடியாது. அது நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அரசின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய அரசு அனுமதிக்காது.
மணவெளி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் ட்ராமா செய்து கொண்டு இருக்கிறார். அவர்தான் நீர்நிலை இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் எழுப்பி வருகிறார். இது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மின் கட்டண உயர்வைப் பொறுத்தவரை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. இருப்பினும் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார்.
முதல்வரின் தனி செயலரிடம் அரசு கொறடா மோதல் என்பது முதல்வர் சம்பந்தப்பட்ட விஷயம். இதை அவரிடம்தான் கேட்க வேண்டும். தலைமைச் செயலர், செயலர்கள், துணை நிலை ஆளுநர், முதல்வர் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை இனி விரைவாக செய்ய முடியும். கடந்த காலங்களில் அப்படி இல்லை. தலைமை செயலர், துணைநிலை ஆளுநர், முதல்வர் என்ற மூன்று அதிகாரம் மையங்கள் தனித்தனியாக இருந்தன. தற்போது அனைத்து நிர்வாக மையங்களும் ஒன்றிணைந்து ஒரே அரசாக செயல்படுகிறது. புதிய துணைநிலை ஆளுநர் இணக்கமாக செயல்படுவதன் காரணமாக நல்ல நிர்வாகம் நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கேற்ப இன்றைக்கு நேரடி பணப்பரிமாற்றம் ரத்து செய்யப்பட்டு இலவச அரிசிக்கான டெண்டர் விடப்பட்டு ரேஷன் கடை திறக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நான் நிழல் முதல்வரா?
முதல்வர் அறிவிக்க வேண்டியதையெல்லாம் தன்னிச்சையாக சபாநாயகர் அறிவிக்கிறார். நீங்கள் நிழல் முதல்வராக செயல்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், அரசின் திட்டங்களை நான் தன்னிச்சையாக அறிவிக்கவில்லை. முதல்வர் அறிவித்ததைதான் நான் மீண்டும் தெரிவிக்கிறேன். முதல்வர் தன்னை சுயவிளம்பரம் செய்து கொள்ள மாட்டார். அதே நேரத்தில் அரசின் நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு தெரியவேண்டும். அதன் அடிப்படையில் தகவலை தெரிவிக்கிறேன். முதல்வரை மீறி திட்டங்களை அறிவிப்பதாக மற்றவர்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது, என்றார்.