வந்தவாசி, ஜூலை 31: வந்தவாசி அருகே தனியார் நிறுவனங்களிடம் குறைந்த விலைக்கு சேலைகள் வாங்கி பதுக்கி வைத்து, அரசின் இலவச சேலை கொள்முதலில் அதிமுகவை சேர்ந்தவர்கள் முறைகேடு செய்துள்ள பரபரப்பு தகவல்கள் அதிகாரிகள் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து அதிகாரிகள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் திருநீலகண்ட தெருவைச் சேர்ந்தவர் ராஜன்(50), உரக்கடை உரிமையாளர். இவருக்கு சொந்தமாக 2 லோடு ஆட்டோவில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அரசு வழங்கும் நூல்களை பொன்னூர், குணகம்பூண்டி, வெடால், சித்தருகாபுதூர், அசனமாபேட்டை உள்ளிட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதேபோல் நெசவாளர்கள் தயாரிக்கும் கைத்தறி சேலைகள் காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களுக்கு ராஜனின் ஆட்டோவில் கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி அரசின் இலவச சேலை வழங்கும் திட்டத்திற்காக, தனியார் நிறுவனங்களிலிருந்து சேலை கொள்முதல் செய்யப்பட்டு ராஜன் வீட்டில் வைத்திருப்பதாகவும், அந்த சேலைகளில் அரசு முத்திரையிட்டு பொன்னூர் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்ப தயாராக இருந்ததாகவும் போலீசார் மற்றும் வருவாய்துறையினருக்கு நெசவாளர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் சேலைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்லாதபடி அந்த வீட்டை சூழ்ந்தனர். மேலும் பொன்னூர் ஒன்றிய திமுக கவுன்சிலர் கெம்புராஜ் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து துணை தாசில்தார் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 1500 கைத்தறி சேலைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறைக்கு ‘சீல்’ வைத்தனர். இந்நிலையில் கைத்தறி துறை திருவண்ணாமலை உதவி இயக்குனர் கார்த்திகேயன் நேற்று முன்தினம் பொன்னூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலாளர் பொறுப்பில் உள்ள ராணியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது நெசவாளர்கள், ‘எங்களுக்கு நூல் கொடுக்காமல் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வது குறித்தும், வெளி மார்க்கெட்டில் தயாரிக்கும் சேலைகளை குறைந்த விலைக்கு வாங்கி நெசவாளர்கள் கொடுத்ததாக கூறி அரசை ஏமாற்றுவது குறித்தும், இதற்கு உடந்தையாக உள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு விசாரணை நடைபெறும் வரை இந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை மூடி, கண்காணிப்பாளர் பராமரிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். அதற்கு முன்னாள் சங்க தலைவர் அதிமுகவை சேர்ந்த நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ‘சங்கத்தை பூட்டக்கூடாது. நூல் வாங்கி சென்று சேலை கொடுத்த நெசவாளர்களை இங்கே அழைத்து வருகிறோம்’ என கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் நூல் வாங்கியதாக கூறியவர்கள் யாரும் சங்கத்திற்கு வராததால் உதவி இயக்குனர் முன்னிலையில், கண்காணிப்பாளர் மோகனரங்கன் அலுவலகத்தை பூட்டினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பொன்னூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக சங்க தலைவராக அதிமுகவை சேர்ந்த நமச்சிவாயம் இருந்துள்ளார். இங்கு மேலாளர் பொறுப்பில் ராணி என்பவரை இவர்தான் நியமித்துள்ளார். இந்நிலையில் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய நூல் 5 சதவீதம் மட்டும் வழங்கிவிட்டு, 95 சதவீதம் வெளிமார்க்கெட்டில் அதிமுகவினர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. விவசாயிகளிடம் வழங்கிய நூலுக்கான சேலைகளை வாங்கிக்கொண்டு, மேலும் சேலைகளை திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை, ஆந்திர மாநிலம் நகரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ₹150க்கு சேலை வாங்கி ₹280க்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட ஆய்வில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் பொன்னூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கோ-ஆப் டெக்ஸ் நிறுவனங்களுக்கு 15 ஆயிரம் சேலைகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரம் சேலைகள் வந்தவாசியில் இருந்து முறைகேடாக அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் நெசவாளர்கள் பட்டியலை சேகரித்து போலியானவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கலாம் எனவும், விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.