முசிறி, நவ.8: முசிறி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்திய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி போலீஸ் எஸ்பி வருண் குமார் உத்தரவின் பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி பொறுப்பு மதுவிலக்கு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் முசிறி இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் எஸ்ஐக்கள் திருப்பதி, ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முசிறி அருகே உள்ள தண்டலைபுத்தூர் பெட்ரோல் நிலையம் பகுதியில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கதர வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, கடத்தி வரப்பட்ட பொருட்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் பாக்கு மூட்டைகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் புகையிலை கடத்தி வந்தது துறையூர் அருகே உள்ள மருவத்தூரை சேர்ந்த ஆனந்தன் (44), சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த தாமோதரன் (43), இனாம் சமயபுரத்தைச் சேர்ந்த ராமராஜ் (31) மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அக்கரைபட்டியை சேர்ந்த பாபு கண்ணன்(40), துறையூர் ஆலமரத் தெருவை சேர்ந்த தீபக் (30) ஆகியோர் என்பதும், தடை செய்யப்பட்ட போதை புகையிலை கடைகளுக்கு சப்ளை செய்ய விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 200 கிலோ போதை புகையிலை மற்றும் பாக்குகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.