திருச்சி. பிப்.5: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அரசாணை 243ஐ ரத்து செய்யக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ்நாடு தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ வௌியிட்டுள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று (பிப்.4) மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.