வேடசந்தூர், ஜூலை 19: அய்யலூர் பேரூராட்சியில் குப்பாம்பட்டி, கிணத்துப்பட்டி, கோம்பை, தபால்புள்ளி, காக்காயன்பட்டி, பஞ்சம்தாங்கி உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. இந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் குறுகிய இச்சாலையின் இருபுறமும் செடிகள் புதர்போல் மண்டி ஆக்கிரமித்துள்ளது. இதனால் வளைவுகளில் எதிர் திசையில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் இருந்து பஞ்சம்தாங்கி நோக்கி அரசு பேருந்து சென்றது. வழியில் ஒரு வளைவு பாதையில் செல்லும் போது திடீரென குறுக்கே வாகனத்தால் பேருந்து தடம் மாறி சாலையோரம் இருந்த மண்மேட்டில் மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. எனவே இனி விபத்துகள் நடக்கா வண்ணம் வனத்துறையினர் சாலையின் இருபுறம் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.