குளித்தலை, மே 30: அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் சேவையானது தற்போது பலத்த காற்று வீசி வருவதால் காற்றின் வேகத்தை பொறுத்து ரோப் கார் சேவை இயக்கப்படும் என்று கோயில் செயல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர் மலையில் உள்ளது சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரத்து 17 படி உயரம் கொண்ட ரெத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் மலை உச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. அதையடுத்து குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முயற்சியால் ரோப்கார் திட்டம் கொண்டுவரப்பட்டு கடந்தாண்டு ஜூலை மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி மூலம் ரோப் கார் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் கோயிலுக்கு வரும் முதியவர்கள், சிறியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் ரோப் காரில் பயணம் செய்து மலைமீதுஅமைந்துள்ள ரெத்தினகிரீ்ஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் தினந்தோறும் ஆடிக்காற்று போல் பலத்த காற்று வீசி வருகிறது.
அதனால் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோயிலில் செயல்படும் ரோப் கார் சேவை குறித்து இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் ரோப் கார் பயணத்தின்போது காற்றின் வேகம் அதிகமானால் ரோப் கார் சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டு காற்றின் வேகம் குறைந்த பிறகு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும். மேலும் தொடர்ந்து காற்று அதிகமாக வீசினால் பக்தர்களின் நலன் கருதி ரோப் கார் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த அறிவிப்பின்படி ரோப்கார் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.