தஞ்சாவூர், ஜூன் 7: தஞ்சையிலிருந்து கும்பகோணம் நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சின் டிரைவராக பாபநாசம் அருகே உத்தம தானபுரத்தை சேர்ந்த குணால் (25) என்ற டிரைவர் பேருந்தை ஓட்டிவந்தார். கண்டக்டராக அய்யம்பேட்டை அருகே ஈச்சங்குடியை சேர்ந்த கிரியோன் (29) கண்டக்டர். இந்த பஸ் அய்யம்பேட்டை அருகே நெடுந்தெரு சத்திரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்ஸை வழிமறித்த சில வாலிபர்கள் பஸ்ஸில் ஏறி டிரைவர் குணாலை கைகளாலும் கட்டைகளாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்சை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.இதையறிந்த அந்த வழியாக வந்த மற்ற தனியார் பஸ் ஊழியர்கள் டிரைவரை தாக்கிய வாலிபர்களை உடனே கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தஞ்சை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.