பெரம்பூர், மே 16: அயனாவரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறார் மன்றத்தை கூடுதல் ஆணையர் பிரவேஷ்குமார் திறந்து வைத்தார். சென்னையில் சிறுவர், சிறுமிகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘சிறார் மன்றம்’ மூலம் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பல்வேறு இடங்களிலும் சிறார் மன்றங்கள் கட்டப்பட்டு, பாடம் படிக்கவும், விளையாடி மகிழவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் எச்சிஎல் பவுண்டேஷன் இணைந்து ரூ.1.20 கோடி மதிப்பில் சிறார் மன்றம் கட்டப்பட்டது. இதனை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் பிரவேஷ்குமார் நேற்று திறந்து வைத்தார். இந்த மன்றத்தில் தரைதளத்தில் கம்ப்யூட்டர் அறை மற்றும் மாணவ மாணவிகள் படிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில் மாணவ மாணவிகள் விளையாடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த மன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்தி படிப்பு மற்றும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட காவல் இணை ஆணையாளர் விஜயகுமார், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குனர் விஜய் கார்த்திகேயன் மற்றும் எச்சிஎல் பவுண்டேஷன் உயர் அதிகாரிகள், அயனாவரம் இன்ஸ்பெக்டர் வர்கீஸ் தலைமைச் செயலக குடியிருப்பு இன்ஸ்பெக்டர் முகிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.