திருத்தணி, அக். 15: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ₹15 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கப்படும் என்று அறிவித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மரங்களை வெட்டி பறவைகளின் வாழ்விடத்தை அழிப்பதற்கும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து சென்னை வரை புறநகர் மின்சாரயில்களும், இயக்கப்படுகிறது. அதேபோன்று, சென்னையில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதி, மும்பை, விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், நாள்தோறும் இந்த ரயில் நிலையத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர். இருப்பினும், போதிய வசதிகள் இன்றி இந்த ரயில் நிலையம் இயங்கி வந்தது. இதன் காரணமாக ஒன்றிய அரசு தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ₹15 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கப்படும் என்று அறிவித்து, அதற்கான திட்டத்தை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ரயில் நிலையத்தில் லிப்ட் மற்றும் எக்ஸ் லெட்டர் கூடிய நவீன நடை மேம்பாலம், 12 மீட்டர் அகலத்தில் கட்டுமான பணியை மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோன்று, எதிர்ப்புற சாலையிலிருந்து ரயில் நிலையத்திற்கு வரும் முகப்பு வாயிலை கோயில் கோபுரம் போன்று அமைப்பதற்கும் அதற்கான நடவடிக்கைகள் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
அதே நேரத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் இத்திட்டத்தை நிறைவேற்றாமல், அவர்களை அலைகழிக்கின்ற வகையிலும், ஏராளமான பறவைகள் தங்கி வாழ்கின்ற, மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இத்திட்டத்தை மாற்றி அமைக்கவும் வலியுறித்துள்ளனர். தற்போது புதிதாக நவீன நடை மேம்பாலத்தை கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ள பகுதியில், காந்தி ரோடு சாலையை இணைக்கப்படுகின்றன. இந்த இணைக்கப்பட்ட பகுதியில் அரசமரம், புங்க மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் மாலை நேரத்தில் சுமார் 10,000 மேற்பட்ட பறவைகள் மற்றும் குஞ்சுகள் மரக்கிளைகளில் அமர்ந்து இரவு நேரத்தில் ஓய்வெடுத்து வருகின்றன. தினமும் மாலை நேரத்தில் பறவைகளின் சத்தங்களை கேட்டு மன அமைதி பெறவே பல பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர்.
தற்போது, இந்த நடை மேம்பாலம் கட்டுவதற்காக அந்த மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை, ஒன்றிய ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு இருப்பதால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மரங்களை அப்புறப்படுத்தாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எனவே, இத்திட்டத்தை மாற்றி அமைத்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பறவைகள் மற்றும் இயற்கை மரங்களை காக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
அதிக அளவில் பேருந்துகள் மூலமாக 80% பொதுமக்கள் வருகை புரிந்து, மாபோசி சாலை வழியாக திருத்தணி ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு வருகின்ற பயணிகள் நுழைவாயிலில் இருந்து டிக்கெட்டை பெற்று நடைமேடைள் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று ரயில்வே பிளாட்பாரங்களுக்கும் சென்று தங்கள் பயணத்தை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது, இந்த ரயில்வே டிக்கெட் கவுண்டரை அதிக அளவில் பயன்படுத்தும் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி குறைந்த அளவே (அதாவது, 20% பயணிகள் வருகை புரியக்கூடிய பகுதியில்) ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் வரும் காந்தி ரோடு (டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரே) அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது ரயில் பயணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் என பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே தொடர்ந்து மாபோசி சாலை ரயில்வே நிலையத்திற்கு உள்ளே செல்லும் பகுதியில் டிக்கெட் கவுண்டர்களை வைக்க வேண்டும். அதே நேரத்தில், இரண்டு, மூன்று ரயில்வே பிளாட்பாரங்களில் டிஜிட்டல் டிக்கெட் கவுண்டர்களையும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரயில் நிலையம் பகுதியில் கமலா திரையரங்கம் மற்றும் திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் இணைக்கும் வகையில் ரயில்வே நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை இரண்டு புறங்களும் சென்று வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த நடை மேம்பாலத்தை அப்புறப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு, பொதுமக்களும் ரயில் நிலைய பயணிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்து உள்ளனர். அம்ரித் பாரத் திட்டம் மூலம் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும், மரங்களை வெட்டி பறவைகளின் வாழ்விடத்தை அழிக்காமலும் திட்டத்தை மறு ஒழுங்கமைப்பு செய்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.