நிலக்கோட்டை, ஆக. 1: அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்க, செயல் அலுவலர் பூங்கொடிமுருகு முன்னிலை வகித்தார். துணை தலைவர் விமல்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் முதல் வார்டு கவுன்சிலர்கள் வரையிலான உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிய தமிழக முதல்வருக்கும், கலைஞரின் நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட சாலைகளை மேம்படுத்த நிதி வழங்கிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலரும், பேரூர் செயலாளருமான விஜயகுமார் பேசுகையில், ‘பேரூராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் பஸ் நிலைய விரிவாக்கம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இதில் கவுன்சிலர்கள் செல்வி, கருணாகரன், மாரியப்பன், காசியம்மாள், சத்தியா புஷ்பம், மீனாட்சி, விஜயக்குமார், குலிலி ஆரோக்கியமேரி, ஜெயராஜ், கவிதா ராஜாங்கம், முகமதுநசீர், தேவி, முத்துலெட்சுமி, துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை நிலைய எழுத்தர் அசோகன் நன்றி கூறினார்.