நிலக்கோட்டை, மே 29: தினகரன் செய்தி எதிரொலியாக அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் சாலையில் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் ஊன்றப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் பிரசித்தி பெற்ற கதலி நரசிங்க பெருமாள் கோயிலுக்கு செல்லும் முக்கிய சாலை சந்திப்பில் வாரந்தோறும் சந்தை நடைபெறும். பொதுமக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டு, அதில் உள்ள கம்பிகள் வெளியில் தெரிந்தன. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் நிலவி வந்தது. எனவே மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை ஊன்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் கடந்த மே 25ம் தேதி வெளியானது. இதன் எதிரொலியாக அம்மையநாயக்கனூர் மின்பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் மலர்கொடி உத்தரவின் பேரில் பழுதடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு உடனடியாக புதிய மின்கம்பம் ஊன்றப்பட்டது. மழைக்காலம் துவங்கும் முன் ஆபத்தான நிலை இருந்த மின்கம்பம் அகற்றி புதிய மின்கம்பத்தை ஊன்றியதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் அனைவரது நலன் கருதி செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த மின்வாரியத்திற்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.