பவானி, ஜூன் 30: காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பினால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும்.
எனவே, அம்மாபேட்டை, சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளில் காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்தியூர் தாசில்தார் கவியரசு, அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம், செயல் அலுவலர் சதாசிவம் வருவாய் ஆய்வாளர் ரவிசங்கர், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.