ஈரோடு, ஜூலை 29: 2வது வார ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, ஈரோடு பெரிய மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். எனவே, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, 2வது வாரமான ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று ஈரோடு நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், பத்ரகாளியம்மன், கள்ளுக்கடைமேடு கொண்டத்து காளியம்மன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.