சாயல்குடி, ஜூன் 27: முதுகுளத்தூர் அருகே ராசாத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் ராசாத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து புதன்கிழமை கோமாதா பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு, கோயிலை சுற்றி வந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதணை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.