அம்பை, அக்.17: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கிராம உதவியாளராக தெற்கு கல்லிடைக்குறிச்சி உமாபதி, வைராவிகுளம் முத்துக்குமார், மேல அம்பாசமுத்திரம் முத்துராமலிங்கம், வடக்கு கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியன் ஆகியோர் பணியாற்றிவந்த நிலையில், இவர்களுக்கு திடீரென பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. பழிவாங்கும் நோக்கத்தோடு பணியிட மாற்றல் உத்தரவு வழங்கியதாகக் குற்றம்சாட்டிய கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் இதை கண்டித்து அம்பையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பை வட்டாரத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்களை, தாசில்தார் அவமரியாதையாக பேசுவதை கண்டித்தும், கிராம உதவியாளர்கள் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் அம்பை தாலுகா அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் முத்தையா, மாநில செயலாளர் பிச்சுக்குட்டி, மாவட்டத் தலைவர் நாராயணன், செயலாளர் முருகன், பொருளாளர் முகமது ரபீக், மகளிர் அணி மாவட்ட பொருளாளர் சுப்புலட்சுமி கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம உதவியாளர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.