கறம்பக்குடி, ஜூன் 4: அம்புக்கோவில் கிராமத்தில் சலூன் கடை உரிமையாளர் வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, அருகிலுள்ள காட்டில் விட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அம்பு கோவில் கிராமத்தைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியன். இவர், கறம்பக்குடியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது, வீட்டிற்குள் நேற்று காலை விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டதும் வீட்டிலிருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
பின்னர், இதுகுறித்து, கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) கருப்பையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் மீட்டு, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.