Saturday, June 10, 2023
Home » அம்பல் வீற்றிருந்த பெருமாள்

அம்பல் வீற்றிருந்த பெருமாள்

by kannappan

காரைக்கால் மார்க்கத்தில் பூந்தோட்டத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள அழகிய கிராமம் அம்பல். இத்தல பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறைய சங்கு சக்கரம் அபய வரத முத்திரைகளுடன்  அருட்பாலிக்கிறார். தலவிருட்சம் இலந்தை (பத்ரி) எனவே தென்பதரியென கூறுவர். வடபதரி செல்ல முடியாதவர்கள் தென்பத்ரி அம்பல் வந்து மன் நாராயணனை நன்கு சேவிக்கலாம். பெருமானின் வலதுபுறம், கன்னிகை வடிவில் நாற்கரங்களுடன் சங்கு, சக்கரம், வரத ஹஸ்தத்துடன், இடதுகரத்தில் கிளியையும் தாங்கி சௌம்ய மூர்த்தியாக வைஷ்ணவி தேவி எழுந்தருளியுள்ளார். சிவனுடைய வரத்தால் செறுக்குற்று மக்களுக்கு தொல்லை கொடுத்த அம்பன் அம்பரன் என்ற இரு அரக்கர்களை அழிக்க, மகா விஷ்ணு முதிய கிழவர் வடிவில், விஷ்ணு மாயையைச் சிறு பெண் வடிவில் தன்னுடன் அழைத்து வந்தார். அழகிய கன்னிகையை மணக்க இரு அரக்கர்களும் போட்டியிட்டனர். என்னுடைய பெண்ணை உங்களில்  ஒருவருக்குத்தான் கொடுக்க இயலும். நீங்களே முடிவு செய்யுங்கள் என சொல்லவே இருவரும் சண்டையிட்டு ஒருவன் மாண்டான். அடுத்தவன் கன்னிகையின் கைபிடிக்க முயற்சி செய்தபோது சாந்தை வைஷ்ணவி உக்ர காளியாக அரக்கனைத் துரத்திச்சென்று அம்பகரத்தூர் என்ற ஊரில் அவனை அழித்தாள். இரு அரக்கர்களும் சண்டையிட்ட அம்பல் திடல் அருகில் இன்று செக்போஸ்ட் உள்ளது என பெரியோர்கள் கூறுவர். வைஷ்ணவியை லட்சுமி ஸஹஸ்ரநாமங்களால் துதிக்கின்றனர். மஞ்சள் – சிவப்பு நிற வஸ்திரமே சாத்துகின்றனர். அம்பாளுக்கு நிவேதனம் சர்க்கரைப் பொங்கல் திருக்கண்ணமது மற்றும் ததியன்னம் எனும் தயிர்சாதம் மட்டுமே. பலருக்கு குலதெய்வமாகத் திகழும் வைஷ்ணவி, சிறுபெண் குழந்தை வடிவில் கனவில் தோன்றி அருள்தரும் பேசும் தெய்வமாக பலரும், சொல்லக்கேட்டதுண்டு, பெருமாள் கோயிலில் காளி வைஷ்ணவியாக, சாந்தையாக அருட்பாலிப்பது சிறப்புடையது. கிருஷ்ணாவதாரத்தின்போது தன் விஷ்ணு மாயையை யசோதையிடம் பிறக்க ஆணையிடுகிறார். ஸ்ரீமன் நாராயணன் பலராம அவதாரத்திற்கும் இவளே காரணம். அவளை பின்னாளில் துர்க்கா, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா சண்டிகா, கிருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா, நாராயணி ஈசானி, சாரதை, அம்பிகா என 14 பேர்களுடன் கேட்ட வரம் அருளும் தேவியாக பூவுலகில் திகழ்வாய் என ஆசீர்வதித்தார் பரமன். இக்காரணத்தால் கோகுலாஷ்டமியன்று, இங்கு வைஷ்ணவி தேவிக்கும் விசேஷ திருமஞ்சனம் பூஜைகள் நடப்பது சிறப்பு. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் முதல் வெள்ளி துவங்கி கடைசி வெள்ளியன்று பூர்த்தியாக லட்சார்ச்சனைகள் நடக்கிறது. வடதேச வைஷ்ணவி தேவி யாத்திரை செல்ல முடியாதோர் வைஷ்ணவியை தென்னாட்டிலேயே அம்பலில் தரிசிக்கலாம். ஆறுகோடி ராமநாம ஸ்தூபிகள் இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, அர்த்தமண்டபத்தில் விருத்த அனுமனின் எதிரே 3 கோடி ராமநாமம் கொண்ட ஸ்தூபியும், கருட மண்டபம் அருகே 3 கோடி ராம நாமம் அடங்கிய ஸ்தூபியும் நிறுவப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ராமநாமம் இருக்கிறதோ அங்கெல்லாம் நானிருப்பேன் என அனுமன் சொல்வதற்கேற்ப இந்த தலத்தில் பால, விருத்த, விஸ்வரூப அனுமார் என மூவர் எழுந்தருளியுள்ளது மிகவும் சிறப்பு. சனிக்கிழமைகளிலும் அமாவாசை தோறும் அனுமனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அனுமத் ஜயந்தியின்போது அனுமானுக்கு லட்சார்ச்சனை தொடர்ந்து 27 ஆண்டுகளாக நடைபெறுகிறது. தன் பக்கத்தில் அனுமனின் மீது அளவற்ற பாசம் கொண்ட ராமன் இங்கு உற்சவ மூர்த்தியாக லட்சுமணன், சீதை, அனுமனுடன் எழுந்தருளியுள்ளார். ராமநவமியன்று  ராமபிரானின் திருவீதியுலா கண்கொள்ளாக் காட்சி. கோயிலின் அர்த்த மண்டபத்தில்  வைகானச ஆகமம் நல்கிய விகனஸாச்சாரியார் எழுந்தருளியுள்ளார். ஆடி சிரவணத்தன்று இவருக்கு விசேஷ திருவாராதனம் நடைபெறுகிறது. வைகானஸ ஆகமப்படி, வைகானஸர்களால் பரம்பரையாக நன்கு நிர்வகிக்கப்படும் திருக்கோயில் இது. கோயிலில் லட்சுமி, விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், உடையவர், தும்பிக்கையாழ்வார் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலின் அருகிலேயே, வைஷ்ணவி திருக்குளம் உள்ளது. குளக்கரையில் குழலூதும் கண்ணன் உள்ள துளசி வனமும் உள்ளது. அங்கு வைகானச சித்தரின் பிருந்தாவனம் இருந்ததாக கூறுவர். கோயிலைச்சுற்றியுள்ள நறுமணம் கமழும் பூந்தோட்டம், துளசி வனம் கோயிலின் அழகை பிரகாசிக்கிறது. நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம். அம்பல் பெருமாள் சந்நதி 300 வருட பழமையானது. திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளின் அபிமான ஸ்தலம். அம்பல் அம்பரனை வதம் செய்ய, எம்பெருமானின் அனுக்ரஹத்துடன் கன்னிகையாக வந்த வைஷ்ணவித் தாயார், கேட்டவரம் அருளும் அன்னையாக, சங்கு சக்கரம், ஏந்தியும், வலதுகை அபய முத்திரையுடனும் இடதுகையில் கிளி தாங்கியும் சௌம்ய மூர்த்தியாக பெருமானின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் திகழ்கிறாள். பலருக்கு குலதெய்வம். சீதா, ராமசந்திரன், லட்சுமணன் அனுமனும் உத்ஸவ மூர்த்தியாக இருக்கின்றனர். ெசாற்ப வருவாய் உள்ள கோயில் அம்பல் மாமுனி குடும்பத்தைச் சேர்ந்த வைகானஸர்கள் பரம்பரையாக நன்கு நிர்வகித்து ஆராதித்து வருகின்றனர்.ந.பரணிகுமார்…

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi