சாத்தூர், நவ.10: சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் வேலை பார்த்த காந்திராஜன்(35) என்ற வாலிபர் கடந்த அக்.10ம் தேதி இருவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் சாத்தூர் பகுதி பதற்றமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ராயல் மாயாண்டி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையை சேர்ந்த பார்வதிநாதன்(26) என்ற தேவபிரான் என்பவர் இருதரப்பினர் இடையே பதற்றம் உருவாக்கும் விதத்தில் வீடியோ வெளியிட்டதாக தெரிகிறது. இவர் மீது சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஒரு வாரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சாத்தூர் நகர் சார்பு ஆய்வாளர் அப்துல் காதர் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த பார்வதிநாதனை கைது செய்தார். அவரை சாத்தூர் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.