காங்கயம், நவ.10: அமைச்சர் மு.பெ.சாமிநாதனை தகாத வார்த்தைகளால் விமர்சித்து முகநூலில் பதிவிட்ட பாஜ பிரமுகரின் முகநூல் பதிவுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் அனைத்து அரசு நிகழ்ச்சியையும், நலத்திட்டங்களையும் துவங்கி வைக்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காங்கயம் பாஜ கட்சியை சேர்ந்த சரவணவேல் என்பவர் அவருடைய முகநூலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை மரியாதை குறைவாக தகாத வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார். இப்பதிவுகளை கண்ட மற்ற கட்சியினரும், பொதுமக்கள் சிலரும் இப்பதிவுகளை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இதனை தொடர்ந்து காங்கயம் திமுக கட்சி நிர்வாகிகள் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காங்கயம் போலீசார் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.