சேலம், நவ. 22: சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையான மல்லூரில் ஆயிரகணக்கான திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டி- உடையாப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதன்லால் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சேலம் வந்தார். அவருக்கு சேலம் மாவட்ட எல்லையான மல்லூரில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம். செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். எம்பிக்கள் பார்த்திபன், கவுதமசிகாமணி, மேயர் ராமச்சந்திரன், மாநகர செயலாளர் ரகுபதி, தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், பி.கே. பாபு, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர். அண்ணாமலை மற்றும் ஒன்றிய நகர செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்பி. அருண்கபிலன் மற்றும் அதிகாரிகளும் வரவேற்றனர்.