ராமேஸ்வரம், அக்.14: மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் இன்று இரவு எட்டு மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளிரத வீதியுலாவை தொடர்ந்து காப்புகட்டுதலுடன் நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. மஹாளய அமாவாசை நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பின்னர் சுவாமி அம்பாள் சன்னதிகளில் வழக்கமான கால பூஜைகள் நடைபெறும். இரவு 8 மணியளவில் சுவாமி அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருள வீதியுலா நடைபெறும்.
நாளை துவங்கவுள்ள நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு காப்புக்கட்டுதல் நிகழ்சி நடைபெறும். நாளை கோயில் அம்பாள் சன்னதியில் நவராத்திரி உற்சவத்தின் முதல் நாளையொட்டி பர்வதவர்த்தினி அம்பாள் அன்னபூரணி திருக்கோலத்தில் கொலுவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தல் நடைபெறும். நவராத்திரி உற்சவத்தின் இரண்டாம் நாள் மகாலெட்சுமி, மூன்றாம் நாள் சிவ துர்க்கை, நான்காம் நாள் சரஸ்வதி, 5ம் நாள் கொளரி சிவபூஜை, ஆறாம் நாள் சாரதாம்பிகை கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நவராத்திரி உற்சவத்தின் ஏழாம் திருநாள் கெஜலெட்சுமி, எட்டாம் திருநாளை முன்னிட்டு மஹசாசுரமர்த்தினி, 9ம் திருநாளை முன்னிட்டு துர்கா, லெட்சுமி, சரஸ்வதி என மூன்று தேவியர்கள் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். நவராத்திரி உற்சவத்தின் ஒன்பது நாட்களும் தினமும் இரவில் பரதநாட்டியம் பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.