குறை நீக்கி அருள் செய்மந்திரங்களை நான் முறையாக பாராயணம் செய்யவில்லையோ? ஸ்வரம் தப்பாக வேதம் சொல்கின்றேனோ? நம்பிக்கை இல்லாதவனாய் இந்த முறைகளை நான் செய்கின்றேனோ? செய்ய வேண்டிய பூசனை முறைகளை நான் தவறாக செய்தேனோ? காலம் தவறி செய்கிறேனோ? உடல் தூய்மையும், உள்ளத் தூய்மையும் இன்றிச் செய்கின்றேனோ? என்று தன் குறைகளை எண்ணுகின்றார். ‘‘கென் குறை நின் குறையே அன்று’’ இறைவியின் அருளானது தனக்கு கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று தேடுகின்றார், பட்டர். மேலும். இந்த பிறவியில் நன்றாகத்தானே செய்தேன். பூர்வ ஜென்மத்தில் செய்த பாவம் காரணமாக நான் செய்யும் இந்த கடுமையான பூசனைக்கு பயனின்றி போகிறதோ? நான் உன்னிடத்தில் வைத்த அன்பு உண்மைதானா! தேவைக்காக நம்மிடத்தில் நம்மைப் புகழ்ந்து பேசுகின்றானா! என்று என்னை சோதித்துப் பார்க்கிறாயா என்ன? என்று தன் குறையினால் தான் தனக்கு பலன் கிடைக்கவில்லை என்று எண்ணுகிறார். அதையே தான் ‘‘கென் குறை நின் குறையே அன்று ’’ என்கிறார்.‘‘முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே ’’தேவர்கள், மானுடர்கள், ரிஷிகள் இவர்களுடைய பிரார்த்தனைகளை செவி சாய்த்து அவர்களுடைய பிரச்னைகளை முறையாக தீர்ப்பவர் சிவபெருமான் அதற்கு காரணமாக இருப்பது உமையம்மை.ஒரு சமயம் மூன்று அசுரர்கள் மலைவடிவில் பிறந்தனர். அவர்கள் அனைவரையும் பரந்து, பரந்து தாக்கி துன்புறுத்தி திரிந்தனர். எந்த தெய்வீக ஆற்றலாலும் அவர்களை வெல்ல இயலவில்லை. பேராற்றல் மிக்கவர்களாக இருந்தனர். தேவர்கள் அனைவரும் இணைந்து சிவபெருமானை தலைவனாகக் கொண்டு ஒரு தேரை அமைத்து அசுரனை அழிக்க ஆயத்தம் செய்தனர். ஆனால், அந்தத் தேர் சிவபெருமான் ஏறும் முன்னே அச்சு முறிந்தது.சிவபெருமானோ இரண்டாவது அம்பு கூட பயன்படுத்தாமல் அசுரர்கள் மூவரையும் ஒரே அம்பில் அழித்து தேவர்களுக்கு அருளினார். அத்தகைய ஆற்றல் மிக்கவரும், சிறப்பு மிக்க வருமான சிவபெருமானுடன் உறையும் பேராற்றலாக இருப்பவார் உமையம்மையே என்பதை,‘‘முப்புறங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே’’ என்ற தமது வாக்கினால் உமையம்மையின் பேராற்றலை எடுத்து இயம்புகிறார். அத்தகைய பேராற்றல் மிக்க உனக்கு அடியேன் கேட்கும். இந்த சிறிய விண்ணப்பமானது உன்னால் முயற்சியின்றி கண் இமைத்தலாலும், கால் அசைவினாலும் செய்யத் தக்கதே என்று உமையம்மையிடம் முறையிடுகிறார், பட்டர்.‘‘வானுதலே’’ என்ற சொல்லால் வாள் போன்ற நெற்றியினை உடைய பாலாம்பிகையை இங்கு குறிப்பிடுகின்றார். சரஸ்வதி, இலக்குமி என்ற தோழியருடன் திருக்கடையூரில் பாலா என்ற சிறுமியாக உமையம்மை காட்சியளிக்கின்றார். பாலாம்பிகா சமேத காலசம்ஹார மூர்த்தியையே ‘‘வாணுதலே’’ என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார்.இறந்த ஆன்மாக்களுக்கு சொர்க்கத்தை அளிக்கவல்ல மோட்ச அர்ச்சனையும், மூப்பினால் துவள்பவருக்கு அருள் செய்ய அறுபதாம் கல்யாணமும், ஆன்மாக்களுக்கு அடுத்த பிறப்பு, இறப்பு, இல்லாமல் செய்ய பிறப்பிலியப்பர், இறப்பிலியப்பர் என்ற இரண்டு சிவலிங்கத்தை. கால சம்ஹார மூர்த்தியின் உள்ளிலும், வெளியிலும் காணலாம். இளமையாய் இருந்து இறையடியில் இன்பம் அனுபவிப்பதற்கு மார்க்கண்டேயர். நினைவில் பதினாறு வயதில் பட்டமும் (துண்டும்) கட்டப்படுகிறது.இத்தகைய உமையம்மையின் அனுக்கிரஹத்தை பெற்றால் ஆத்மஞானமும், அம்பாளின் அருளும் வரும். அப்படி அந்த அனுக்கிரஹம் இல்லை, ஆத்ம ஞானமும் இல்லை, என்றால், ‘‘மூளுகை’’ என்ற கலக்கம் வந்து சேர்ந்து விடும். காலசம்ஹார மூர்த்தியின் உடனுறையும் பாலாம்பிகை முன்னர் தோன்றி அருளும்படி வணங்க வேண்டும், என்று இப்பாடலின் மூலம் பரிந்துரை செய்கிறார்.இனி பட்டரின் வாழ்வு சம்பவத்தை தொடர்வோம். அபிராமி பட்டர் உள் உணர்வோடு பார்த்ததற்கு விடை கூறுவது போல ஒரு குரல் கேட்கிறது. நான்தான் வில்லியாண்டான் சம்சாரம் வந்திருக்கிறேன் என்று கூறியபடி ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தாள். மெல்லிய விளக்கு ஒளியில் அவள் முகத்தை பார்க்கிறார் பட்டர். அதில் அபிராமியின் புன் சிரிப்பைக் காண்கிறார் . அந்தப் பெண்மணி, ஐயா என் வேண்டுதல் நிறைவேறிவிட்டது. அதற்காக நான் வேண்டிய பெரும் படையலை நீங்கள் செய்து கொடுங்கள் என்று அபிராமி பட்டரிடத்தில் அந்த அம்மையார் கூறினார். பட்டரின் துணைவியார் தன் தேவைக்காக கேட்ட பணத்தை விட அதிகமான பணத்தை கொடுத்தார். அபிராமி பட்டர் அகமகிழ்ந்தார்.(தொடரும்)…