Thursday, June 20, 2024
Home » அபாயத்தை துணிந்து எதிர்கொள்

அபாயத்தை துணிந்து எதிர்கொள்

by kannappan

நன்றி குங்குமம் தோழிதயாரிப்பாளர் குனீத் மோங்காபிப்ரவரி 24, 2019 அன்று இரவு ஆஸ்கார் விருதினை பெற சிகப்பு கம்பளத்தின் மேல் ஒய்யாரமாக நடந்து சென்றார் குனீத் மோங்கா. இவருடன் 10  அமெரிக்க பள்ளி மாணவிகள், அவர்களின் வகுப்பு ஆசிரியர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் கிராமத்தை சேர்ந்த ஸ்னேகா என்ற  பெண்மணியும் உடன் இருந்தார். இவர்கள் அனைவருமே 25 நிமிட பீரியட் என்ற டாக்குமென்டரி படம் உருவாக முக்கிய காரணம். ரைகா செக்டாப்சி  இயக்கியுள்ள இந்த படம் ஆவணப்பட வரிசையில் சிறந்த படமாக ஆஸ்கார் விருதினை பெற்றுள்ளது. பீரியட்… உத்தரப்பிரதேச கிராமத்தில் வசிக்கும் பெண்கள் குறைந்த விலை நேப்கின்களை உருவாக்குவது தான் கதை. மாதவிடாய் தொடர்பான  விஷயங்கள் குறித்து இன்றும் பெரும்பாலான குடும்பங்களில் கவனிக்கப்படாத மனப்போக்கு உள்ளது. இந்தியாவின் பின்தங்கிய கிராமங்களில் பழைய  துணி, வைக்கோல், மரத்தூள் மற்றும் வேறு சுகாதாரமற்ற பொருட்களை அந்த நாட்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும் இதற்கான விழிப்புணர்வு  இல்லை என்பது வருத்தத்துக்குரியது. ‘‘வடக்கு ஹாலிவுட்டில் உள்ள ஒரு அமெரிக்க  பள்ளியை சேர்ந்த பத்து பெண்கள் இந்திய கிராமங்களில் பெண்கள் மாதவிலக் கினை எவ்வாறு  கையாளுகின்றனர் என்பதை தெரிந்துகொண்டு, தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்காக சேனிட்டரி நேப்கின்களை  உருவாக்கும் இயந்திரத்தை வழங்க திட்டமிட்டனர். இது தான் இந்த ஆவணப்படம் உருவாக முக்கிய காரணம்’’ என்று பேசத் துவங்கினார் பீரியட்  படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா. சிக்கியா எண்டர்டெயின்மென்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். பத்து  வருடத்துக்கு முன்பு இவர் தயாரித்த ‘கவி’ என்ற குறும்படம் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. ‘காங்கஸ் ஆப் வசேபூர்’, ‘ஹரம்கோர்’,  ‘மாசான்’ போன்ற படங்களை இவர் தயாரித்துள்ளார். இரண்டு ஆஸ்கார் மற்றும் ஒரு BAFTA விருதுக்காக நியமனம் பெற்ற ஒரே இந்திய  தயாரிப்பாளர் என்ற பெருமை இவருக்குண்டு. தில்லியில் ஊடக மாணவியாக தன் பயணத்தை தொடர்ந்தவர் சர்வதேச அளவில் புகழ் பெற்ற  தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். ‘‘மக்களை சினிமா மூலம் என்ன சொல்ல வருகிறோம் என்று கேட்க வைப்பது பெரிய சவால். எனக்கு 19 வயசு தான் இருக்கும். தில்லியில் என் பக்கத்து வீட்டில் இருப்பவர் என்னிடம் ரூ.50 லட்சம் கொடுத்து குழந்தைகளுக்கான போட்டோ  ஸ்டுடியோவை ஆரம்பிக்க சொன்னார். நானோ திரைப்படம் தயாரிக்க நினைச்சேன். பணத்தை வாங்கிக் கொண்டு மும்பைக்கு வந்தேன். பலரை  சந்தித்தேன். எல்லாரும் நான் குழந்தை, என்னிடம் இருக்கும் இந்த பணத்தை ஏமாற்றி பறிக்கத்தான் பார்த்தார்கள். அந்த சமயத்தில்  சுபாஷ் கபூரின்  அறிமுகம் கிடைச்சது. அவருடன் இணைந்து 2007ம் ஆண்டு ‘Say Salam India : Let’s Bring The Cup Home’ படத்தை தயாரித்தேன். என் துரதிருஷ்டம், இந்தியா உலகக்கோப்பை போட்டியில் தோல்வி பெற்ற மறுநாள் அந்த படம் வெளியானது. பெரிய பிளாப். கையில் காசில்லை.  கடனாளியானேன்’’ என்ற மோங்கா தனிப்பட்ட கருத்தினை வலியுறுத்தும் திரைப்படம் தயாரிப்பாளருக்கு உதவாது என்பதை புரிந்து கொண்டார். ‘‘50  லட்சம் திரும்ப தரணும். கையில் ஒரு பைசா இல்லை. தில்லிக்கு சென்றேன். நான் படிச்ச பள்ளி மற்றும் எல்லா பள்ளிகளின் தலைமை ஆசிரியரிடம்  என் படத்தை மாணவர்களுக்கு திரையிட அனுமதி கேட்டேன். படத்தை இலவசமாக திரையிடாமல் ஒரு டிக்கெட் ரூ.50 என நிர்ணயித்தேன். முதலில் மறுத்தார்கள். சலிக்காமல் சென்றேன். என்னுடைய உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்தது. அனுமதி கிடைத்தது. நான் விட்ட பணத்தையும்  சம்பாதிச்சேன். எல்லா பள்ளி மாணவர்களும் என் பார்வையாளராக மாறினாங்க’’ என்றவர் சினிமா துறையில் அடுத்த கட்டம் நோக்கி பயணம் செய்ய  துவங்கினார். ‘‘அபாயத்தை துணிந்து எதிர்கொள்ள சின்ன வயசில் என் பெற்றோர் கற்றுக் கொடுத்த பாடம். எனக்கான முழு சுதந்திரம் இருந்தது. நான்  செய்யாத வேலை இல்லை. டி.ஜேவாக இருந்து இருக்கேன். கார் ரேலியில் பங்கு பெறுவேன். டான்ஸ் ஆடுவேன். டிரம்ஸ் கூட வாசிப்பேன். இவை எல்லாம் தாண்டி கடைசியில் நான் தேர்வு செய்த பாதை தயாரிப்பாளர். சினிமா துறையில் என் மென்டார் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்  அனுராக் காஷ்யப். அவரிடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவரிடம் வேலைப் பார்த்த ஐந்து வருடம் ஒரு சினிமாவை எப்படி பார்க்கணும்,  எவ்வாறு விமர்சிக்கணும், தரமான படமாகவே இருந்தாலும் அது குறித்து கலந்துரையாடல் அவசியம்… போன்ற பல விஷயங்களை கற்றுக்  கொண்டேன். ஒரே கருவை, அதை சார்ந்து எத்தனை சினிமா ரிலீசானது. சினிமா தயாரிப்பது பெரிய வணிகம் என்று தெரிந்த போது, எவ்வளவு திட்டமிட்டாலும், கடைசியில் கதை தான் ேபசும் என்று உணர்ந்தேன்’’ என்கிறார்  35 வயதே நிரம்பிய தயாரிப்பாளர். ‘‘சினிமாவை பொறுத்தவரை ஒரு வெள்ளிக்கிழமையோடு முடிந்துவிடக் கூடாது. நம்முடைய மனம்  விரிவடையணும். கதையின் முக்கிய கருவை எப்போதும் மாற்றக்கூடாது. இந்தியாவில் என் படத்துக்கு அங்கீகாரம் கிடைக்கலைன்னா என்ன?  சர்வதேச அளவில் திரையிட முடிவு செய்தேன். வெற்றியும் பெற்றேன். வெனிசில் 2010ல் நடைப்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘The Girl In Yellow Boots’ திரையிடப்பட்டது. அதற்கான போஸ்டர்களை  காசில்லாத காரணத்தால் என் குழுவின் டி-ஷர்ட்டில் ஒட்டின சம்பவம் இன்றும் நினைவிருக்கு’’ என்றவர் இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச  மார்க்கெட்டில் உள்ள முக்கியத்துவத்தை பயன்படுத்திக் கொண்டார். விளைவு இவரின் ‘The Lunchbox’ திரைப்படம் சர்வதேச சினிமா வரைபடத்தில்  முக்கிய இடத்தை பிடித்தது. ‘‘‘The Lunchbox’ எனக்கு பெரிய பெருமை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் என் ஐந்து படமும் திரை யிட வரிசையில் காத்திருந்தது. வீட்டை விற்று தான் ஒரு படத்தை திரையிட்டேன். இதனால் ஏற்பட்ட   மனஉளைச்சலால் உடல்  ரீதியாக பாதிக்கப்பட்டேன். உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு பிரச்னை… மறுபக்கம் தொழிலில் பேரிடி… ஒரு கட்டத்தில் நான்  என்னையே இழந்தேன். ஒன்றரை வருடம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வச்சேன். ஆன்மிகத்தில் ஆழ்ந்தேன். ஒரு வெள்ளிக்கிழமை நம்  வாழ்க்கையை தீர்மானிக்காது என்பதை உணர்ந்தேன். என் பலம் என்ன என்பதை புரிந்து கொண்டேன். மறுபடியும் தயாரிப்பை கையில் எடுத்தேன். வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் உயிரோடு இருப்பது, அந்த உயிரோட்டம் தான் ஒரு கதையை சொல்ல  தூண்டும். நான் தயாரிப்பாளராக இருந்த போது பல நடிகர்கள் என்னிடம் நேரடியாக, ‘‘என்னைப் பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். அதனால் நானே  படத்தை தயாரிக்கிறேன்’’ என்று கூறியுள்ளனர். நான் விடுவதாக இல்லை. என்னிடம் கதை இருக்கு. அதற்கு உயிர் கொடுப்பேன்’’ என்றவர் அகாடமி  விருதுகளில் வாக்களிக் கும் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ‘‘இந்த இடத்துக்கு வர மிகவும் கடுமையாக உழைத்து இருக்கேன். நெட்பிளிக்ஸ், அமேசான் ஆன்லைன் சேனல்களால் சினிமாவின் மொழி மாறி வருகிறது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 2018ல் நெட்பிளிக்சில்  வெளியான ‘ரோமா’ திரைப்படம் இதற்கு நல்ல உதாரணம். சினிமாவை பொறுத்தவரை வெற்றிப் பெற்றால் இயக்குனருக்கு பாராட்டு, தோல்வி என்றால்  இழப்பு தயாரிப்பாளருக்கு தான். இதை மாற்ற நினைக்கிறேன். என்னுடைய அடுத்த கட்டம் ஒரு முழுமையான திரைப்படத்தை தயாரிக்கணும். அது  ஆஸ்கார் விருது பெறணும். கண்டிப்பாக வெற்றி பெறும்’’ என்றார் தீர்க்கமாக குனீத் மோங்கா.– ப்ரியா

You may also like

Leave a Comment

15 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi