Thursday, July 10, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் அன்பை பரிமாறும் உணவுப் பொட்டலம்!

அன்பை பரிமாறும் உணவுப் பொட்டலம்!

by kannappan
Published: Updated:

நன்றி குங்குமம் தோழிநாம் ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டு இருப்பது அந்த ஒரு ஜான் வயிற்றுக்கு தான். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற சொல் உண்டு. அது மிகவும் நிதர்சனமான உண்மை. ஒரு வேளை உணவுக்காக பிச்சை எடுப்பவர்களையும், பசியினால் சுருண்டு சாலையில் படுத்து இருக்கும் வயதானவர்களையும் நாம் தினமும் கடந்து தான் சென்றுக் கொண்டு இருக்கிறோம். அவர்களை பார்க்கும் நொடி பைக்குள் துழாவி கையில் சிக்கும் சில்லறைகளை கொடுக்கிறோம். சில சமயம் இல்லை என்று நேரடியாக சொல்லி நிராகரித்து விடுகிறோம்.நாம் இயங்கும் இந்த பரபரப்பான வாழ்க்கையில், இவர்களுக்கு அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்வார்கள் என்று யோசிக்கக் கூட நமக்கு நேரமில்லை. ஆனால் அவர்களை பற்றி மட்டுமே யோசித்து, ஒரு வேளை உணவாவது அவர்கள் வயிறார சாப்பிட வேண்டும் என்று அவர்களுக்காகவே வாழ்ந்து வருகிறார் சூளைமேட்டை சேர்ந்த கௌசல்யா. சென்னைவாசியான இவர் தினமும் 30 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.‘‘என் கணவர் ஒளிப்படக் கலைஞர். மாத வருமானம் என்று சொல்ல முடியாது. அவருக்கு கிடைக்கும் ஆர்டரை கொண்டு அந்த மாசச் செலவை ஓட்டணும். குறிப்பிட்டு இவ்வளவு வரும் என்று சொல்லிட முடியாது’’ என்ற கௌசல்யா வசிப்பது ஒரு சின்ன வீட்டில் தான். வீடு முழுக்க அரிசி மூட்டைகளும், சமைப்பதற்கு பெரிய பாத்திரங்கள் மற்றும் பொட்டலம் மடிக்க தேவையான பொருட்கள் என எங்கும் நிறைந்திருந்தது. பார்ப்பதற்கு ஓட்டல் சமையலறை போன்ற உணர்வு ஏற்பட்டது. ‘‘என் கணவர் காலை வேலையை முடிச்சிட்டு இரண்டு மணிக்கு வீட்டுக்கு வருவார்.நான் சாப்பாடு பொட்டலம் எல்லாம் தயார் செய்து வச்சிருப்பேன். நானும் என் கணவரும் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து, உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு கிளம்புவோம். தெருவிலும், பிளாட்பாரத்திலும், பாலத்தின் அடியிலும் பசியில் படுத்து இருப்பவர்களுக்கு நாங்க கொண்டு வந்த உணவு பொட்டலத்தை கொடுப்போம். அவர்கள் அதை பிரித்து ஒரு வாய் சாப்பிட்ட பிறகு தான் அந்த இடத்தில் இருந்து நகர்வோம்.இப்படி ஒவ்வொரு தெருவாக உணவு பொட்டலங்களை கொடுத்துவிட்டு வர சுமார் ஒரு மணி நேரமாகும்’’ என்றவர் மற்றவர்களுக்கு உணவு அளித்த பிறகு தான் அவர் மதிய உணவினை சாப்பிடுவாராம். ‘‘என்னை பொறுத்தவரை தானம் கொடுக்க தனி உணவு, எங்களுக்கு ஸ்பெஷல் உணவு எல்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான். ஒரு நாள் சாம்பார் சாதம் என்றால், மறுநாள் புளிசாதம்ன்னு  ஏதாவது ஒரு சாதத்தை செய்து அவர்களுக்கு கொடுப்பது வழக்கம்.தினமும் உணவு தருவது மட்டுமில்லை, 24 குழந்தைக்கு படிப்புக்கான உதவியும் செய்து வருகிறேன். அவர்கள் பெரும்பாலும் தாய், தந்தையை இழந்தவர்கள் அல்லது வறுமைக் கோட்டில் இருப்பவர்களா இருப்பார்கள். உண்மையான உதவி இவர்களுக்கு தான் அவசியம் என்பதால் அவர்களின் நிலையை பார்த்து தான் உதவுகிறேன்’’ என்றவர் பல சமயங்களில் கையில் பணம் இல்லாமல் இக்கட்டான நிலையை சந்தித்துள்ளார். ‘‘ஒருநாள், வீட்டில் அரிசியும் இல்லை, கையில் பணமும் இல்லை.இன்று உணவு தர முடியாதோ என்று பதட்டமாக இருந்தது. என்னை கவனித்த பக்கத்து வீட்டுப் பெண், விஷயத்தைக் கேள்விப்பட்டு, அரிசி,காய்கறிகள் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். சில சமயம் என் நிலையை புரிந்து கொண்டு நண்பர்களும் உதவி இருக்கிறார்கள். கையில் காசு இருக்கும் போது, என்னால் செலவை சமாளிக்க முடியும்.இல்லாத போது, எப்போதும் நண்பர்களோ, உறவினர்களோ, அக்கம் பக்கத்தினரோ உதவுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் ஒரு அமைப்பை துவங்கி அதன் மூலம் இவர்களுக்கு உதவ நினைச்சேன். 2015ல் ஏ.பி.ஜே அப்துல்கலாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பிச்சேன். ஆனால் அதன் மூலம் இது நாள் வரை பத்தாயிரம் ரூபாய் கூட வந்ததில்லை. எங்களுக்கு ஒரு மாதம் உணவுக்கு மட்டுமே 30ஆயிரம் செலவாகும். உதவ நினைக்கும் சிலர், என் வீட்டிற்கு நேரடியாக வந்து நான் சமைப்பதையும், உணவு அளிப்பதையும் பார்த்து அதன் பிறகு உதவ முன் வருவார்கள்.அப்படி உதவி செய்ய முன் வந்தால் எங்களுக்கு சந்ேதாஷம் தான்’’ என்றவர் உணவு அளிப்பதுடன் நில்லாமல் அவர்களுடன் ஆறுதலாக பேசவும் செய்கிறார். ‘‘சிலருக்கு நாய், பூனை பிடிக்கும். தெருவில் நாயோ, பூனையோ இருந்தால் அதை கொஞ்சிவிட்டு செல்வார்கள். வாயில்லா பிராணிகள் அன்புக்கு ஏங்குவது போல் தான் இவர்களும் ஏங்குகிறார்கள். உணவு அளிப்பதை விட இரண்டு வார்த்தை ஆறுதலாக அவர்களின் கையைப் பிடித்து ‘எப்படி இருக்கீங்கன்னு’ கேட்டதுமே, அழ ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்களைசமாதானம் செய்து கிளம்பும் போது, ‘மறுபடியும் எப்ப வருவே’ன்னு கேட்ட போது மனசில பெரிய பாராங்கல் வைத்தது போல் கணத்தது. ஒரு பெரியவர், அவரை தினமும் சந்தித்து உணவு தருவேன். இப்போது அவர் என் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டார். நான் மதிய உணவு கொடுத்தால் தான் சாப்பிடுவார். நான் வரும் வரை பசியோடு காத்திருப்பார். இவரை பார்க்கும் போது இவரைப் போல் வயதானவர்களை உடன் அழைத்து வந்திட வேண்டும் என்று தோன்றும்.ஒரு நாள், பெரிய வீடு வாங்கி, அதில் அனைவரையும் தங்க வைப்பேன்” என்றவர் கையில் சிறதளவு காசு வந்தாலும், அதில் இன்னும் பத்து பேருக்கு அதிகம் உணவளிக்க முடியுமா என்று தான் சிந்திக்கிறார்.  ‘‘நாங்க செய்யும் சேவையைப் பற்றி இங்குள்ள பலருக்கு தெரியும். அதனால் பலர் என் மேல் நம்பிக்கை வைத்து உதவி வருகிறார்கள். என் வீட்டு அருகில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், வறுமையில் வாழும் குழந்தைகளை தன் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்.ஒரு ஆசிரியர், எனக்காக 20 குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கிறார். அரசு அடித்தட்டு மக்களுக்காக பல சலுகைகளை அமல் படுத்தியுள்ளது. அது பற்றி இவர்களுக்கு தெரியவில்லை. என்னால் முடிந்தவரை அரசு சலுகைகள் மற்றும் உதவிகளை இவர்களுக்கு பெற்றுத் தருகிறேன். 2015ல் வெள்ளத்தால் சென்னையே மூழ்கியது. அந்த சமயத்தில் பல இடங்களுக்கு சென்று என்னால் முடிந்த உதவியை செய்தேன்’’ என்றவர் தனித்தே தன் சேவையை செய்து வருகிறார்.‘‘ஒரு முறை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன். அப்போது இருபது வயது பெண், பல மணி நேரமாக கரையோரம் உட்கார்ந்தபடியே கவலையாக இருந்தார். அவள் முகத்தில் ஒரு வித தவிப்பும், பயமும் இருந்தது. நான் அருகில் சென்று அவளிடம் விசாரித்த போது, அவள் சென்னை வந்தே இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கிறது. காதலனை நம்பி, வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். ஆனால், இங்கு வந்ததும் காதலன் இவளிடமிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு, தனியாக விட்டுச் சென்றுவிட்டான்.திரும்பி ஊருக்கு சென்று, பெற்றோர்களை சந்திக்க தைரியமில்லாமல் இங்கு அமர்ந்திருப்பதாக தெரிவித்தார். அவளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அன்றிரவு என் வீட்டில் தங்க வைத்துக் கொண்டேன். மறுநாள் நானும் என் கணவரும், அந்த பெண்ணை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். அவளோ அவள் பெற்றோர் அவளை கொன்றுவிடுவார்கள் என்று பயந்தாள்.அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றோம். அங்கு சென்ற போது, அவளின் பெற்றோர் அத்தனை கோபம், கவலையை தாண்டி, தன் மகள் பத்திரமாக வீடு திரும்பியதை நினைத்து பெருமூச்சு விட்டனர். இந்த நிகழ்வை என்னால் வாழ்நாளில் மறக்கமுடியாது. இப்போது பெண்கள் தையல் கற்றுத்தரும் படி கேட்கிறார்கள். அதற்கு தையல் எந்திரம் வேண்டும். அதற்கான நிதியினை திரட்டி வருகிறேன்’’ என்கிறார் கௌசல்யா.– ஸ்வேதா கண்ணன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi