திண்டிவனம், ஜூலை 1: பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். பாமகவின் பொருளாளராக இருந்த திலகபாமா நீக்கப்பட்டு, சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு வழக்கறிஞர் கோபு நியமிக்கப்பட்டார். மேலும் பாமகவின் பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கப்பட்டு அப்பொறுப்பில் முரளி சங்கர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், பாமகவில் 80 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 62 புதிய மாவட்ட தலைவர்களை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றில் ராமதாஸ் புதியதாக நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் புதியதாக நியமனம் செய்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடனானஆலோசனை கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தியுள்ள நிலையில் சேலம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த மேட்டூர் எம்எல்ஏ சதாசிவத்தை அதிரடியாக மாற்றிய ராமதாஸ் அவருக்கு பதிலாக ராஜேந்திரன் என்பவரை நியமனம் செய்தார். இதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்எல்ஏ சிவக்குமார் நீக்கப்பட்டு கனல்பெருமாள் என்பவரை நியமனம் செய்தார். மேலும் சமூக ஊடக பேரவையில் பல்வேறு குழப்பங்கள், ராமதாசுக்கு எதிரான பதிவுகள் உள்ளிட்டவை வெளிவந்த நிலையில் சமூக ஊடக பேரவை தலைவராக இருந்த தமிழ்வாணன் நீக்கப்பட்டு தொண்டி ஆனந்தனும், மாநில துணை தலைவராக ஆறுமுகம், மாநில இளைஞர் அணி செயலாளராக விஷ்வா வினாயகம், சேலம் அருள் எம்எல்ஏ பாமக இணை பொது செயலாளராகவும் ராமதாஸ் நியமனம் செய்தார்.
தொடர்ந்து அன்புமணியை வருங்கால தமிழகமே என அவரது ஆதரவாளர்களால் தைலாபுரம் நுழைவு வளாகத்தில் ஒட்டப்பட்ட பேனர் மற்றும் அவரை புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்டர்களையும் கிழித்து அகற்றினர். இதற்காக ராமதாஸ், வருத்தம் தெரிவித்து விஷமிகள் யாரோ இந்த வேலையை செய்துள்ளனர் என்று கூறினார். ராமதாசால் நியமிக்கப்படுபவர்களுக்கு எதிராக நீக்கப்பட்டவர்கள் தொடர்வார்கள் என அன்புமணி தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இவ்வாறு தொடர்ந்து பிரச்னைகள் எழுந்து வரும் நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்த கவுரவ தலைவர் எம்எல்ஏ ஜி.கே.மணி தோட்டத்துக்கு வருவதில்லை. பாமகவில் பல்வேறு குழப்பங்கள் உள்ள நிலையில் பாமகவில் ராமதாஸ், அன்புமணி யார் அதிகாரம் பெற்றவர் என தெரியவில்லை. இரு பிரிவுகளாக பிரிந்து நிர்வாகிகள் மாறி மாறி இருவரையும் சந்தித்து பதவிகளை பெற்று வரும் நிலையில் தற்போது ஒவ்வொரு பாமக மாவட்டத்துக்கும் 2 தலைமைகள் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பாமகவில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மோதல் சம்பவங்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாமக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், 45 ஆண்டுகளாக 96 ஆயிரம் கிராமங்களுக்கு நடையாக நடந்து பாமகவை கிளை கிளையாக வளர்த்து பெரிய ஆலமரமாக உருவெடுத்த நிலையில் தற்போது மகனால் ஒவ்வொரு கிளையாக வெட்டப்பட்டு வருவது பெரும் வேதனைக்குரிய சம்பவமாக உள்ளது, என்றனர். மேலும் இதனை தொடர்ந்து பனையூரில் நடைபெற்ற சமூக ஊடக பேரவை கூட்டத்தில் ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த அன்புமணி, தன் மனைவி குறித்து யார் பேசினாலும் எனக்கு கோபம் வரும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ராமதாசிடம் கேட்டபோது வியாழக்கிழமை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அவருக்கான பதில்கள் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அன்புமணி நேற்று திடீர் டெல்லி பயணம் சென்றுள்ளதால் தந்தையுடன் அன்புமணியை சமாதானமாக செல்ல பாஜக ேமலிடம் சொல்லுமா? என பாமக நிர்வாகிகள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது.