விராலிமலை, ஜூன் 16: அன்னவாசல் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகளில் வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உலக சுற்றுச் சூழல் தினம் ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என நிர்வாக வசதிக்கு ஏற்ப அடுத்து வரும் நாட்களில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தி சுற்றுச்சூழலை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு தலைமை ஆசிரியர் சிராஜ் நிஷா தலைமை வகித்தார்.உதவி தலைமை ஆசிரியர் விர்ஜின் டயானா முன்னிலை வகித்தார்.
இதில், பங்கேற்ற மாணவிகள் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளை அதிகப்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தகூடாது, மரக்கன்றுகளை நடுதல், நகரத்தில் மாசுபாட்டைக் குறைத்தல், வீடுகளில் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் பொருத்துதல் மற்றும் மழை நீர் சேகரிப்பு போன்றவற்றைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகளில் வலம் வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.