காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், இலவச பயணச்சலுகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில், கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை பெற் (24.3.2023) இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), உணவுப்பொருள் வழங்கல் அட்டை (ரேஷன் கார்டு), ஆதார் அட்டை மற்றும் கல்வி பயில்பவர்கள், கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட சான்று அல்லது பணிக்கு செல்பவர்கள், பணிபுரியும் நிறுவனத்தில் பெறப்பட்ட சான்று அல்லது மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு, மருத்துவரிடம் பெறப்பட்ட சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் (மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில்) நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையும். மேலும், விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 044-29998040ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.*விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மார்ச் மாதத்திற்கான விவசாயிகளின் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆர்த்தி தலைமையில், இன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கவும், மேலும் பி.எம்.கிசான் திட்டத்தில், அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணை தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் ekyc மூலம், பி.எம்.கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவுசெய்து உறுதி செய்யலாம் அல்லது பொதுசேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல்ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைபேசியில் வைத்து உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் மீ-கேஓய் சிஎனும் பக்கத்திற்கு சென்ற ஆதார் எண்ணை உறுதிசெய்யலாம். எனவே, பி.எம்.கிசான் தவணைதொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும். மேலும், பி.எம்.கிசான் பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திடவும், நேரடி பயன்பரிமாற்றம் வசதி தங்களது வங்கி கணக்கில் செயல்பாட்டில் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….