திருச்சி, மே 4: அனைத்து நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களுக்கு தற்போதைய கோடைகால வெப்பநிலையை சமாளிக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமினஷனர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து திருச்சி மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் தெரிவித்துள்ளதாவது, சென்னை தொழிலாளர் ஆணையா் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையா் ஜெயபாலன் அறிவுரையின்படியும் கடைகள்,
உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனகளிலுள்ள தொழிலாளர்கள் ஆகியோருக்கு, தற்போது நிலவும் கோடைகால வெப்ப நிலையை சமாளிக்கும் வகையிலான வசதிகள் செய்து கொடுப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய குடிநீர் வசதி, குளியலறை வசதி, கழிப்பறை வசதி, காற்றோட்டமான சூழ்நிலை,
சுழற்சி முறையில் ஓய்வு அடிபப்டையிலான வேலை நேரம், இருக்கை வசதி ஆகியவற்றை அனைத்து நிறுவனங்களும், தமிழ்நாடு கடைகள் நிறுவனச்சட்டத்தின் கீழ் செய்து தர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்ட அமலாக்க அலுவலா்களால் தொடா் கண்காணிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.