நாகப்பட்டினம்: காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண பாதயாத்திரை வெற்றியை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகப்பட்டினம் நகர பகுதியில் நடைபயணம் நடந்தது. நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் நவ்ஷாத் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபயணம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. சேவாதளம் மாவட்டத் தலைவர் நசிர்அலி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியை மரியாதை செய்து மாவட்டத் தலைவர் அமிர்தராஜாவிடம் ஒப்படைத்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமையின் கோஷங்களை எழுப்பி சென்றனர். சிறுபான்மை துறை தேசிய ஒருங்கிணைப்பாளர் மீராஉசேன், நாகப்பட்டினம் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் உதயசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.