சென்னை, அக்.5: சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 79 விளம்பரப் பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சென்னை உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க, அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 21ம் தேதி முதல் இன்று (நேற்று) வரை சுமார் 79 விளம்பரப் பலகைகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில்-2, அண்ணாநகர் மண்டலத்தில்-18. தேனாம்பேட்டை மண்டலத்தில்-47, அடையாறு மண்டலத்தில்-12 என மொத்தம் 79 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மண்டலம் 1 முதல் 15 வரை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளும் கண்டறியப்பட்டு, அவை அனைத்தும் கட்டுமானத்துடன் விரைவில் அகற்றி முடிக்கப்படும் வகையில், இப்பணி பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், கட்டிட உரிமையாளர்கள், தங்களுக்கு சொந்தமான கட்டிடத்தில் விளம்பரப் பலகைகள் அமைக்க விளம்பர நிறுவனங்கள் விளம்பரம் மேற்கொள்ள அனுமதிக்கும் பட்சத்தில், அந்த விளம்பர நிறுவனங்கள் அந்த இடத்தில் விளம்பரம் செய்ய சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை அமைக்க கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதிக்கும் பட்சத்தில், சென்னை மாநகராட்சியால் கட்டிடத்தின் உரிமையாளர் மீது சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.