ஈரோடு, மே 25: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் உரிய அனுமதியின்றி பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் மற்றும் அரசியல் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து நடைமேடை, நடைபாதை, சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து வகையான பிளக்ஸ் பேனர்களை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மேலும், மாநகராட்சி அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆணையர் தனலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.