நெல்லிக்குப்பம், ஜூலை 30: நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில போதுமான கட்டிட வசதி இல்லாததால் புதிய கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில் பள்ளி வளாகத்தில் அரசு மூலம் 9 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள பழமையான மரங்கள் பள்ளி மேலாண்மைக்குழு அனுமதியோடு வெட்டப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தாரணி பார்த்திபன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பள்ளி வளாகத்தில் முற்றுகையில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் அனுமதி பெற்று வெட்டப்பட்ட மரங்களை பள்ளியிலிருந்து வெளியில் எடுத்து செல்ல வேண்டும் எனவும், வேறு ஏதேனும் பள்ளி மீது புகார்கள் இருப்பின் மாவட்ட கல்வி துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி கட்டுமான பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் வருவாய் ஆய்வாளர் ஜான்சிராணி, கிராம நிர்வாக அலுவலர் கயல்விழி ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தினை அளவீடு செய்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பாலூர் ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.