வாழப்பாடி, ஜூன் 18: வாழப்பாடி அருகே குறிச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சியில் 23 வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அந்த பகுதி நெடுஞ்சாலை பகுதி என வருவாய்துறை பதிவேட்டில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரிவின் குறிச்சி பொறுப்பாளர் குபேந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டம் குறித்த துண்டு பிரசுரங்கள் ஊர் முழுவதும் ஒட்டிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அனுமதியின்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குபேந்திரன் உள்பட 30 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர்.