பெரம்பலூர், ஜூலை 2: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் பேரளி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த கஜபதி, வேப்பந்தட்டை ஒன்றியம் அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த செல்வகுமார் ஆகியோர் பணி ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அதே போல் கல்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏற்கனவே பணிஓய்வு பெற்ற நிலையில் அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் தலைமை ஆசிரியராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்த உத்தரவில், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரான சுரேஷ் என்பவர் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரான முத்துக் குமார் என்பவர் கல்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் உதவித் திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்த ஜெய்சங்கர் என்பவர் அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜெய்சங்கர் அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், முத்துக்குமார் கல்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.