பல்லாவரம், மே 21: அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் நேற்று அகற்றினர். தமிழ்நாடு அரசு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அடையாறு நதி சீரமைப்பு திட்டத்தின் கீழ், அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து வசிக்கும் குடும்பங்களுக்கு ‘மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு’ பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய சார் துறைகள் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, அடையாறு நதி கரையோரங்களில் வசிக்கும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மறுகுடியமர்வு செய்யப்படுகின்றனர். குறிப்பாக, அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து தாய் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.
அவற்றில், சுமார் 600 வீடுகள் உள்ளன. அதில், ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை அங்கிருந்து அகற்றி, மறுகுடியமர்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர். முதற்கட்டமாக, அங்கிருந்த 81 குடும்பத்தினரை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றி, அவர்களுக்கு சென்னை பெரும்பாக்கம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் மற்றும் கிஷ்கிந்தா சாலை ஆகிய இடங்களில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கொடுத்து, அதில் தங்க வைக்கப்பட்டனர். மீதியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்ற, கடந்த 12ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் தயாராகினர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு, கையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் சென்றனர்.
இந்நிலையில், மீண்டும் நேற்று காலை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்றுவதற்கு தயார் நிலையில் வந்தனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்களில் பலர் எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்பதால், முன்னதாகவே துப்பாக்கி ஏந்திய போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், ஆக்கிரமிப்பாளர்களில் முதல்கட்டமாக 20 பேர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு, அரசு ஒதுக்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு குடிபெயர சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, முதற்கட்டமாக 10 வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினர். மீதமுள்ள வீடுகளையும் காலி செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் போன்ற பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் அனைத்தும் இப்பகுதியை சார்ந்தே அமைந்துள்ளது. அப்படி இருக்கையில் திடீரென்று எங்களை அப்புறப்படுத்தி, எங்களது குடியிருப்புகளை அகற்ற நினைப்பது எந்த விதத்தில் நியாயம். நாங்கள் குடியிருந்து வரும் எங்களது குடியிருப்புகளை அகற்றாமல், எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,’’ என்றனர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளால் பல்லாவரம் – குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
20 குடும்பத்தினருக்கு அரசு வீடு ஒதுக்கீடு
அடையாறு ஆற்றங்கரையில் அகற்றப்பட்ட 20 வீடுகளில் வசித்து வந்த குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு தைலாவரம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் பயனாளிகளுக்கு வழங்கினார். மீதமுள்ள 3 குடும்பங்களுக்கு கீரப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டுள்ளதால் விரைவில் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.