சென்னை, டிச.10: அதிவேக பயணத்திற்காக தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் சரக்கு போக்குவரத்துக்கு ஏற்றார்போல விரைவில் வந்தே பாரத் சரக்கு ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என இந்தியன் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் மிகப்பெரிய ரயில் சேவையை கொண்டுள்ள நாடுகளில், இந்தியா முன்னணியில் இருக்கிறது. நமது நாட்டில் சுமார் 26,000 கி.மீக்கும் அதிகமான நீளத்தில் தண்டவாளங்கள் இருக்கின்றன. இதில் தினமும் 13,000 பயணிகள் ரயில்கள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு நாளும் சுமார் 24 கோடி மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால் பயணிகள் ரயிலை விட, சரக்கு ரயிலில்தான் ரயில்வே துறைக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
நிலக்கரி, சிமென்ட், ரசாயனங்கள், பெட்ரோலிய பொருட்கள், ஆட்டோ மொபைல்கள், உணவு தானியங்கள், எக்கு, இரும்பு பொருட்கள், ராணுவ தளவாடங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை ரயில்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக திறந்த வேகன்கள், மூடப்பட்ட வேகன்கள், பிளாட்-டாப் வேகன்கள், டேங்க் வேகன்கள், கன்டெய்னர் வேகன்கள் போன்ற வகை வகையான பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சரக்கு ரயில்கள் பெரும்பாலும் மெதுவாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மாற்றாக வந்தே பாரத் சரக்கு ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டு வருகிறது. அதிவேகத்திற்கு என உருவாக்கப்பட்ட இந்த ரயில்கள், பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே, இதனை சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டிருக்கிறது. சரக்குகளை கொண்டு செல்லும் வகையில் பிரத்யேக வேகன்கள் தயாரிக்கப்படும் என்றும், விரைவில் இந்த வேகன்களை கொண்டு வந்தே பாரத் சரக்கு ரயில் மும்பை-குஜராத் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வகை ரயில்களில் எலக்ட்ரானிகல் பொருட்கள் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இ-காமர்ஸ் வணிகம் பெரிய அளவில் வளர்ச்சியை எட்டும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். செல்போன்கள், கணினிகள், அதன் உதிரி பாகங்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்கள் இந்த ரயிலில் எடுத்த செல்லப்படும். அதேநேரம், மற்ற வழக்கமான சரக்குகளை கொண்டு செல்லும் வகையில் புதிய வேகன்களும் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரயில்வே துறைக்கு சரக்கு ரயில்கள் மூலமாகதான் வருவாய் அதிகம் கிடைக்கிறது என்பதால் இந்த புதிய ரயில்கள், துறையின் வளர்ச்சியையும், லாபத்தையும் வேகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. வந்தே பாரத் சரக்கு ரயில் பெட்டிகள் 13 மீட்டர் தொலைவு கொண்டதாக இருக்கும் எனவும், மொத்தமாக 250 290 டன் எடை கொண்ட பொருட்களை கையாளும் வகையில் ரயில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பெட்டிகளை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.