திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் இன்பநாதன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி மாதவன், சீனிவாசன், திருத்தணி ரவி, குமார், பேரூர் செயலாளர்கள் ஜெயவேலு, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கந்தசாமி வரவேற்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி அமைப்பதற்கான முன்னாள் எம்பியும், மாணவரணி மாநில செயலாளருமான விஜயகுமார் கலந்து கொண்ட ஆலோசனை வழங்கி நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும், பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்தது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அவர் ஒவ்வொரு பூத்துக்கும் 19 பேர் நியமிக்கப்பட வேண்டும்.
அதில் யார், யார் இடம் பெற வேண்டும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை நியமிக்காமல் பரவலாக அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகியும், வீடு வீடாக சென்று கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொது மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் ஒன்றிய அவைத் தலைவர் சிற்றம் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஞானக்குமார், எழிலரசன், முன்னாள் ஆவின் தலைவர் கவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.