புதுக்கோட்டை, ஜூலை 5: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே திமுக நிர்வாகி மகனைத் தாக்கியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அடுத்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் வளர்மதி, திமுக வழக்கறிஞர் அணி தெற்கு மாவட்ட செயலாளர். இவரது மகன் வெங்கட் திருமாறன் என்ற வெங்கடேஷ்(32). இவர், கீரமங்கலத்தில் இருந்து கொத்தமங்கலத்துக்கு நேற்று முன்தினம் இரவு காரில் சென்றார். நகரம் சன்னதி பகுதியில் சென்றபோது, இவரது காரை நிறுத்திய 4 பேர் அரிவாளால் சரமாரியாக காரை அடித்து நொறுக்கியதோடு, வெங்டேஷையும் தாக்கினர்.
காயம் அடைந்த அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்டோரைக் கைது செய்யக் கோரி கீரமங்கலம் காவல் நிலையம் அருகே அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுட்டோரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை சமாதானம் செய்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்நிலையில், குடும்பப் பிரச்சினையினால் தாக்கியதாக வளர்மதியின் சகோதரரும், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளருமான பாண்டியன் உள்ளிட்ட 13 பேர் மீது கீரமங்கலம் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.