திருவண்ணாமலை, ஜூலை 6: ஜவ்வாதுமலை பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்கள் இணையதள சேவையை பெறுவதற்காக அமைக்கப்பட்ட செல்போன் டவர்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது என எம்பி அண்ணாதுரை தெரிவித்தார். திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வதுமலை பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர்நாடு பகுதியில் வசிக்கும் மக்களும் இணையதள சேவையை முழுமையாக பெற வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். அதையொட்டி, அதிவேக 4ஜி இணையதள வசதியுடன் கூடிய புதிய செல்போன் டவர்கள் அமைக்க வேண்டும் என மக்களவையிலும், ஒன்றிய தொலைதொடர்புத்துறை அமைச்சரிடமும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.
அதன் விளைவாக, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 98 புதிய செல்போன் டவர்கள் அமைக்க போராடி அனுமதி பெற்றேன். மேலும், போர்கால அடிப்படையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக ஜவ்வாதுமலையில் உள்ள மலை கிராமங்கள் மற்றும் திருப்பத்தூர் பகுதியில் புதூர்நாடு உள்ளிட்ட மலை கிராமங்களில் 33 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் சோதனை ஓட்டம் கடந்த சில மாதங்களாக நடந்தது.
அதி நவீன தொழில்நுட்டத்துடன் கூடிய 4ஜி திறனுள்ள இந்த செல்போன் டவர்கள் 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் வகையில் மின்சாரம் மற்றும் சோலார் சக்தி வசதியும் பொருத்தியிருக்கிறோம். சோலார் சக்தியில் தொடர்ந்து 48 மணி நேரம் தடையின்றி இயங்கும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
இந்நிலையில், சோதனை ஓட்ட காலத்தில், ஒருசில இடங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டன. அவை முறையாக சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், டவர்களுக்கு இடையே இணைப்புகள் வழங்குவதில் இருந்த சிக்கலும் சரி செய்யப்பட்டுள்ளன. தற்போது, அனைத்து டவர்களும் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இடையில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டு இணையதள சேவை தடைபட்டாலும், அவற்றை கண்காணித்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பல்வேறு பணிகளை, முதல்வர், துணை முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நிறைவேற்றி வருகிறேன். தொலை தொடர்பு வசதியில் தன்னிறைவு பெற்ற பகுதியாக ஜவ்வாதுமலை மாறி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.