மதுரை, ஆக. 23: மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களால், மதுரை மாநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, வைகை ஆற்றின் தென்கரை மற்றும் வடகரைகளில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன. இதில் வைகை தென்கரை சாலை திருமங்கலம் செல்லும் காளவாசல் பைபாஸ் சாலை, ஆரப்பாளையம் பஸ் நிலையம் உட்பட, மாநகரின் தென் பகுதி களுக்கு செல்லும் வாகனங்களுக்கு பிரதான சாலையாக உள்ளது.
இச்சாலையில் ஆரப்பாளையம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பிருந்து, காளவாசல் பைபாஸ் சாலைக்கு செல்ல திரும்பும் பகுதி வரையிலான சாலை பலத்த சேதமடைந்த நிலையில் உள்ள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கீழே விழுகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சாலை மீண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதில் செல்லும் வாகனங்கள் பெரும் விபத்துக்களில் சிக்கிக்கொள்ளும் முன், இச்சாலையை முழுமையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.