வேலூர், ஆக.29: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அணைக்கட்டு தாலுகா அகரம் கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அளித்த மனுவில் `எங்கள் ஊரை சேர்ந்த ஒரு பெண், ஒரு பிரச்னை தொடர்பாக கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த மற்றொரு பெண் அவருக்கு அறிமுகமானார். அப்போது அந்த பெண், தனக்கு தெரிந்த நிதிநிறுவனத்தில் அதிக வட்டி தருகிறார்கள் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி, எங்கள் ஊரை சேர்ந்த பெண் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பலரிடம் ₹36 லட்சம் வரை வசூலித்து வங்கி மூலமாக அந்த பெண் கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால் வட்டியும் தரவில்லை, அசலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து 2 பெண்களிடமும் கேட்டதற்கு அவர்கள் அடியாட்களை வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர். எனவே மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.