திருவண்ணாமலை, ஜூலை 22: அதிக மகசூல் தரும் புதிய ரக நெல் விதைகளை வேளாண்துறை மூலம் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கூடுதல் கலெக்டர் ரிஷப் தலைமையில் நேற்று நடந்தது. அதில், வேளாண் இணை இயக்குநர் ஹரகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, கால்நடைத்துறை இணை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ேமலும், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கே.வி.ராஜ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மெய்கண்டன், சிவக்குமார் உள்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கடந்த மாதங்களில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மீது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தனி நபர் கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பியிருப்பதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம்: பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தொடர்ந்து நிதி உதவி வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து. விடுபட்ட விவசாயிகளுக்கும் பயிர்காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும். ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள், தரிசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். வேளாண்மைத் துறை மூலம் அதிக மகசூல் தரும் புதிய ரக விதை நெல்களை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும். நயம்பாடி ஊராட்சி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாட்டு தீவினத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே பால்கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி, ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படுத்திட வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறையின் மூலம் ஏரி குளங்கள் மற்றும் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு விரைவில் பதில் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.