பரமக்குடி,ஆக.27: பரமக்குடியில் அதிக பயணிகள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பரமக்குடியில் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை விதிமுறைகளை மீறி அதிக அளவில் ஏற்றி செல்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோவில் பயணிக்கும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்களை நிறுத்தி ஆய்வு செய்ததுடன், சீருடை அணியாத ஆட்டோ டிரைவர்கள் அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் மீது அபராதம் விதித்தார். ஆவணங்கள் இல்லாத வாகனங்களை சோதனை செய்து அவற்றை காவல் துறையிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.