நன்றி குங்குமம் டாக்டர் Centre Spread Specialரொம்பவும் டென்ஷனான வாழ்க்கை… சாப்பிடக்கூட நேரமில்லை… எல்லோர் மீதும் எரிச்சல் என்று இன்றைய நவீன வாழ்க்கை பலருக்கும் பதற்றமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி மன அழுத்தத்துடன் வாழ்கிறவர்கள் அதிகாலையில் எழ ஆரம்பித்தால், நல்ல மாற்றங்கள் அவர்களின் கண் முன்னே நிகழும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று உத்தரவாதம் தருகிறது.அமெரிக்காவின் மசாசூசெட் பொது மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர் ஜாக்குலின் லேன் இந்த ஆய்வை நிகழ்த்தியிருக்கிறார். தன்னுடன் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார். இதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் பேரின் நடவடிக்கைகளும் அவர்களது மரபியல் காரணிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பயோ பேங்க்-கும் இதற்காக உதவி செய்தது.இதில் தாமதமாக எழுகிறவர்களில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்ப்பவர்களாகவும், இரவில் அதிக கலோரி கொண்ட உணவு எடுத்துக் கொள்வதாகவும் தெரிய வந்தது. தாமதமாக எழுகிறவர்கள் மன அழுத்தம், மனச்சிதைவு போன்ற உளவியல் சிக்கல்களுக்கும் அதிகமாக ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இவர்களுடன் ஒப்பிடுகையில் அதிகாலை எழுகிறவர்கள் ஆனந்தமாக இருப்பதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது புரிந்தது என்று மகிழ்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இத்துடன் அதிக எனர்ஜி கொண்டவர்களாகவும், தங்களின் இலக்குகளை அடைகிறவர்களாகவும், முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாகவும் அதிகாலைப் பறவைகள் இருக்கிறார்கள்.‘வேலை இருக்கிறது’, ‘எங்களுக்கான பர்சனல் நேரம்’ என்ற காரணத்தைச் சொல்லி இரவில் தாமதமாக உறங்கச் செல்லும் பழக்கத்தை மாற்ற வேண்டும். அதே வேலைகளை அடுத்த நாளின் பகல் வேளைகளிலோ, மாலை நேரங்களிலோ திட்டமிடுங்கள்.ஏனெனில், Circadian rhythm என்ற இயற்கையின் இயக்கத்துக்கும், உயிர்க்கடிகாரத்துக்கும் எதிராக நீங்கள் செயல்படுவதே பல நோய்களுக்கும் காரணமாகிறது. இதனால் மகிழ்ச்சி குறைவதுடன் மனச்சிதைவு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகம் என்று எச்சரிக்கிறார் ஜாக்குலின் லேன். மேலும் காலை நேரம், மாலை நேரம் பற்றி விரிவான ஆய்வுகள் நடத்த வேண்டியிருக்கிறது. மரபணுக்களில் இதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் கண்காணித்து வருகிறோம் என்கிறார்.– ஜி.ஸ்ரீவித்யா
அதிகாலையில் எழுகிறவர்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள்!
86
previous post