டெல்லி: அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க அமைப்பு ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரிக்க மனு அளிக்கப்பட்டிருந்தது. அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ ஆகியன பெருந்தொகையை முதலீடு செய்திருப்பது பற்றியும் விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.ரூ.1800க்கு அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விற்றபோது ரூ.3200 க்கு வாங்க எஸ்பிஐயும், எல்ஐசியும் விண்ணப்பித்ததாகவும் மக்கள் பணம் பல லட்சம் கோடியை அதானி குழுமம் அபகரித்து விட்டதாகவும் மனுவில் ஜெயா தாக்குர் குற்றம்சாட்டியிருந்தார். ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேக்தாவும், அதானி நிறுவனத்துக்கு எதிராக பிரசாந்த் பூஷண் வாதம் வைத்தனர். அதானி குழுமம் மீதான புகார்களை விசாரிப்பதற்கு குழு அமைக்கக் கோரிய மனு மீதான முடிவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.அதானி விவகாரம் தொடர்பாக சீலிட்ட உரையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதிலை ஏற்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். அதானி குழும நிறுவனங்கள் தொடர்பான வழக்கு வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கமளித்தார். அதானி குழுமம் மீதான முறைகேடுகள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை தேவை என்று பிரசாந்த் பூஷண் வாதிட்டார். பங்குச்சந்தையை வளைத்து தமது நிறுவனப் பங்குகளின் விலையை செயற்கையாக அதானி குழுமம் உயர்த்தியதாக புகார் எழுந்த நிலையில் செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியதாக கூறப்படும் புகாரையும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் செயற்கையாக பங்கு விலையை உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து செபி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் மனோகர் சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது….